தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அக்டோபர் 20 முதல் 21 வரை மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் இன்று (20.10.2026) முதல் நாளை (21.10.2026) வரை மிகக் கனமழை பெய்யும் என 'ஆரஞ்சு' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கோரம்பள்ளம் ஆறு, அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கோ செல்லாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்டத்தின் மழைநீர் தேங்கக்கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர்நிலைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும், நகர்ப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றிடவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது கைபேசி எண் 7092300044 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

