தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (21.10.2026) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காலாங்கரை ஓடை, கழுகு ஓடை, கழுதை ஓடை, பெரியபள்ளம் ஓடை மற்றும் பண்டாரம்பட்டி குளத்திற்கு வரும் நீர்வரத்து ஓடை, எஸ்.வி குளம், மாடன்சாமி குட்டத்து குளம், மீளவிட்டான் ஓடையிலிருந்து பக்கிள் ஓடையினை இணைக்கும் 4வது கேட் பகுதியில் உள்ள கால்வாய் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு, மதகுகள் மற்றும் நீர்வழித் தடங்களை சீரமைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.