தூத்துக்குடியில் 'ஹலோ பிரிட்டானிக்கா' கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முதல் பள்ளி என்ற சிறப்புடன், கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலான 'ஹலோ பிரிட்டானிக்கா' புதிய கல்வித் திட்டத்தின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் வாசித்தல், எழுதுதல், கேட்டல் மற்றும் பேசுதல் ஆகிய நான்கு அடிப்படை ஆங்கில மொழித்திறன்களையும் மேம்படுத்துவதுடன், நவீன கற்றல் முறைகள் மூலம் அவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இப்பயிற்சியின் மூலம் பள்ளியின் 3-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

இத்தொடக்க விழாவிற்கு பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை மெலிண்டா சூசன் தாமஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் தமிழ்நாட்டு மெர்க்கன்டைல் வங்கியின் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கணினி அறையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து 'ஹலோ பிரிட்டானிக்கா' கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் சி.எஸ்.ஆர். அரவிந்த் குமார் மற்றும் பள்ளிச் செயலாளர் டி.ஆர். தமிழரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Kvpstudents.jpg

கடந்த 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாணவ-மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு கற்றல் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.