திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உள்பிரகாரங்கள், சண்முக விலாச மண்டபம் உள்ளிட்ட 45 இடங்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கையைச் செலுத்துவதற்காக நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் அர்ச்சகரான முத்தன்ஐயர் (65), மூலஸ்தானத்திற்கு முன்புள்ள உண்டியலில் கடந்த அக்டோபர் 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கையை உள்ளே விட்டுப் பணத்தைத் திருடியது கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதேபோல, புதுச்சேரி ஆர்யாகுப்பத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி கொடிமரம் முன்பு உள்ள உண்டியல் வாயிலில் துணியை வைத்துள்ளார். அப்போது பக்தர்கள் அந்த உண்டியலில் காணிக்கை செலுத்திய பின்னர், அந்தத் துணியை வெளியே எடுத்து அதனுடன் இணைந்திருந்த காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளார். இந்தக் காட்சியும் கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட இச்சம்பவங்கள் குறித்துக் கோயில் உள்துறை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அர்ச்சகர் முத்தன்ஐயர் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர். மேலும் இதுகுறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

