திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது தசரா விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானக் கூடத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் அன்னதானத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
அப்போது வரிசையில் நின்றிருந்த நபர் ஒருவர், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த குவாட்டர் மதுபாட்டில் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து உடைந்தது. அதில் இருந்து சிதறிய பீங்கான் கண்ணாடித் துண்டுகள் அருகில் நின்றிருந்த சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனின் காலில் குத்தியது. இதில் சிறுவனின் காலில் ரத்தம் வழிந்து காயம் ஏற்பட்டதால் சிறுவன் வலியால் துடித்து அழுதான்.
இதைக் கண்டு கோபமுற்ற சிறுவனின் உறவினர்கள் மற்றும் சக பக்தர்கள், கோவில் வளாகத்திற்குள் மது அருந்திவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்ட அந்த மதுப்பிரியரைப் பிடித்து சரமாரியாக தாக்கி 'செம கவனிப்பு' கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார், அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சிறுவனுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
புனித தலமான திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

