தமிழகத்தில் நிதி ஆதாரமின்மை மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் பருவமழை பாதுகாப்புப் பணிகள் முடங்கியுள்ளதாகவும், ஊழல் மலிந்துள்ளதாகவும் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாகத் தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகளுடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தேவையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் சரிவரச் செய்யவில்லை. கண்மாய் மதகுகள் மற்றும் நீர்வரத்து பகுதிகள் சீரமைக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. நிதியாதாரம் இல்லை என்ற காரணத்தைக் கூறி அதிகாரிகள் பருவமழைப் பணிகளைப் புறக்கணிக்கின்றனர். இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உணவுத்துறை அமைச்சர் 30 ரூபாய்க்குப் பொன்னி அரிசி வழங்குவதாகக் கூறுகிறார்; ஆனால், நான் விளாத்திகுளம் பகுதியில் ஆய்வு செய்தபோது 76 சதவீதம் மட்டுமே பொருட்கள் வந்துள்ளன. இதனால் பொதுமக்களுக்கு முழுமையாகப் பொருட்களை வழங்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், விதைப்பு நேரம் வந்துவிட்ட நிலையில், கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்கனவே வாங்கிய கடனைக் கட்டியவர்களுக்கும் மீண்டும் கடன் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட வேண்டிய நிலையில், இச்சரக்கின் கீழ் எங்குமே அது வழங்கப்படவில்லை.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் தொடர் போராட்டத்தினால் குப்பைகள் அகற்றப்படாமல் டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் கிராமங்களுக்கு முறையாக நீர் செல்லவில்லை. அவசரகாலத் தேவை எனக் கூறி அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மக்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வெறும் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் விடுமுறை எடுத்தால் மற்றொருவர் எப்படி இரவு பகலாகப் பணியாற்ற முடியும்? மக்கள் படும் துயரத்தை துடைக்க வேண்டிய அரசு கேளிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
மக்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்காமல் ஒரு நடிகரை ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்; அவரும் ரீல் முதலமைச்சராக ஜோசப் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே திறம்படச் செயல்பட்ட மு.க. ஸ்டாலின் மாதிரி இல்லாமல், லண்டன் செல்வது, ஆந்திராவுக்குச் சென்று சினிமா வசனம் பேசுவது என இந்த ஆட்சி ஒரு கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
10 சதவீதம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற நிலை உள்ளதால், த.வெ.க. ஆட்சி ஊழலின் உச்சத்தில் இருக்கிறது. மக்கள் இதை உடனடியாகத் தட்டிக் கேட்க வேண்டும் என்றார்.

