தமிழ் திரைப்படத் துறையில் தனது தனித்துவமான குரல் வளத்தால் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75), உடல்நலக்குறைவு காரணமாகக் சென்னையில் இன்று காலமானார்.
‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..’, ‘காத்து அடிக்குது..’, ‘சிரிச்சுட்டு போனாலும்..’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். இருப்பினும், சேரன் இயக்கத்தில் வெளியான ‘பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் இவருக்குத் திரைத்துறையில் மிகப்பெரிய புகழைச் சேர்த்தது.
இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர்களில் ஒருவரான இவர், தமிழில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 2000-களுக்குப் பிறகு வெளியான ‘பருத்திவீரன்’ படத்தில் ‘அய்யயோ’ பாடலையும், ‘கழுகு’ திரைப்படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ பாடலையும் பாடிய இவர், இறுதியாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் ‘நாலு நிமிஷம்’ பாடலைப் பாடியிருந்தார்.
மறைந்த பாடகர் கிருஷ்ணராஜின் உடல், சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், இசையுலகினர் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தேவா இசையில் எண்ணற்ற பாடல்களைக் கொடுத்த கிருஷ்ணராஜ் மறைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

