தமிழகத்தில் கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை (அக். 17) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், டெல்டா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை (அக். 17), நீலகிரி, கோவை, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை:

சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூா், வேலூா், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூா், கரூா், பெரம்பலூா், அரியலூா், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (அக். 17) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் இன்று (அக். 17) சனிக்கிழமை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அவ்வப்போது பலத்த மழை பெய்யக் கூடும்.