தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பு காலதாமதமாக வெளியானதால், மழையில் நனைந்தபடியும் நீண்ட தூரம் பயணம் செய்தும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மழைக்கால விடுமுறை குறித்த அறிவிப்பை முந்தைய நாள் இரவே அல்லது அதிகாலை 6.00 மணிக்குள் வெளியிட வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்துவரும் சூழலில், இன்று (22.10.2026) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். எனினும், இந்த அறிவிப்பு காலதாமதமாக வெளியானதால் பல மாணவர்கள் வழக்கம் போல் காலையிலேயே பள்ளிக்குக் கிளம்பிச் சென்ற பின்னரே விடுமுறை விபரம் தெரியவந்துள்ளது.
இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து தூத்துக்குடி மாநகரப் பகுதிப் பள்ளிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள், பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகக் காலை 6.00 மணிக்கே புறப்பட்டுச் சென்றுள்ளனர். சுமார் 7.30 மணியளவில் பேருந்து நிலையம் வந்தடைந்த பிறகு பெற்றோர்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து அவர்களை மீண்டும் ஊருக்குத் திருப்பியனுப்பிய நிகழ்வுகள் நடந்தன.
இது போன்ற காலதாமதமான அறிவிப்புகளால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாவதாகத் தெரிவித்த பெற்றோர்கள், இனிவரும் காலங்களில் வானிலை எச்சரிக்கைகளைக் முன்கூட்டியே கணித்து, விடுமுறை குறித்த அறிவிப்பை முந்தைய நாள் இரவே அல்லது அன்று காலை 6.00 மணிக்குள் வெளியிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

