கோவை பகுதியைச் சேர்ந்த தனியார் சோலார் நிறுவனம் சார்பில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் சோலார் பிளாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராகக் கன்னியாகுமரி மாவட்டம் மதுசூதன புரத்தைச் சேர்ந்த ஆனந்த் (40) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
அந்த நிறுவனத்திற்குத் தேவையான சோலார் மின் சாதனங்கள் மற்றும் செப்புக் கம்பிகள் அனைத்தும் அங்குள்ள குடோனில் வைக்கப் பட்டிருந்தது. இதனிடையே கடந்த 1-ஆம் தேதி இரவு அங்கு வந்த மர்மக் கும்பல் குடோன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்கள், கம்பிகள் உள்ளிட்டவற்றைத் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து சோலார் மேலாளர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் சுமார் 8 பேர் கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளைக் கும்பலைத் தேடிவந்தனர்.
விசாரணையில் திசையன்விளை காமராஜ் நகர் 52-வது தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் சந்துரு (21), புளியடி தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (24), தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகநாதன் மகன் லோகேஷ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

