இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் 'சேயோன்' திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்து, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை வாழ்வியல் சார்ந்த கதைகளத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும் பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இத்திரைப்படத்தில் இணைந்துள்ள சீமான், சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்குக் கொண்டுவரத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் - 2' திரைப்படம் தீபாவளி வெளியீட்டைக் குறிவைத்துள்ளதால், 'சேயோன்' படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது

