செவ்வாய் கிரகத்தின் நிலவு என அழைக்கப்படும் 'போபோஸ்' (Phobos) என்ற அதன் துணைக்கோளில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டு வரும் செயற்கைக்கோளை, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று விண்ணில் ஏவுகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு 'போபோஸ்', 'டீமோஸ்' என இரண்டு சிறிய துணைக்கோள்கள் உள்ளன. ஒழுங்கற்ற வடிவத்தில், உருளைக்கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும் இவற்றின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகளிடம் இன்னமும் தெளிவான முடிவு இல்லை. இவை செவ்வாய் கிரகத்தின் மீது பெரிய விண்பொருள் மோதிய போது சிதறிய பொருட்களிலிருந்து உருவாயிருக்கலாம் அல்லது வேறு பகுதியில் இருந்து வந்த விண்கற்களாக இருக்கலாம் என இரு வேறு கருத்துகள் உள்ளன.

போபோஸ் நிலவின் விட்டம் 20 முதல் 30 கி.மீ. வரை உள்ளது. இது செவ்வாய் கிரகத்திலிருந்து 6,000 கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. பூமியின் நிலவைப் போல அல்லாமல், இது செவ்வாய் கிரகத்தை ஒரு நாளில் மூன்று முறை சுற்றி வருகிறது.

இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாகப் போபோஸ் துணைக்கோளைக் கிழக்காசிய நாடான ஜப்பான் ஆய்வு செய்யவுள்ளது. இதற்காக, ஜப்பானின் புதிய 'எச் 3' ராக்கெட் மூலம் இன்று செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைய ஓராண்டு ஆகும். அதன் பின், போபோஸ் நிலவைச் சுற்றி மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து, மண் மாதிரிகளைச் சேகரிக்கும்.

பின்னர் பூமிக்குத் திரும்பும் விண்கலம், 2031-இல் மாதிர ஒப்படைக்கும் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கைக்கோளின் ஒரு பகுதி மட்டுமே மண் மாதிரிகளைப் பாதுகாப்பாக எடுத்துப் பூமிக்குத் திரும்பும்.

இந்த ஆய்வில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் பங்கேற்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி இணைந்து உருவாக்கிய சிறிய ஆய்வு வாகனமும் இச்செயற்கைக்கோளில் இடம்பெறுகிறது.