அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாகத் தீர்வு காணப் பொறுப்பு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கனமழையைச் சமாளிக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும், மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. வட கடலோரப் பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளதால், சென்னையில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முதலில் ரெட் அலர்ட் விடுத்த நிலையில், சில மணி நேரங்களிலேயே அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இதனிடையே, சென்னையில் மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள சூழலில், பொறுப்பு அமைச்சர்கள் 8 பேரும் உடனடியாக சென்னைக்கு வர வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

"சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உடனடியாகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும். மழைநீரை அகற்றும் பணிகளைச் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்" என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், "சென்னையில் கனமழையைச் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் தயார் நிலையில் உள்ளது. மழை பாதிப்பு நிலவரங்களை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் உடனடியாக நீரை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.