தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிவாள் மற்றும் வெடிபொருட்களுடன் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் சிலர் பயன்படுத்தி வரும் இன்ஸ்டாகிராம் ஐடியில் அரிவாள் மற்றும் வெடிபொருட்களுடன் ரீல்ஸ் வெளியாகியுள்ளதாக எஸ்பி சிவபிரசாத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின்பேரில் முத்தையாபுரம் மற்றும் தென்பாகம் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இதன் அடிப்படையில் முத்தையாபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், முத்தையாபுரம் ஆனந்தா நகரைச் சேர்ந்த காளிதாஸ் (21) என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜாதிய மோதலைத் தூண்டும் விதமாக அரிவாளுடன் போட்டோவைப் பதிவேற்றம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து எஸ்.ஜி. சுப்பிரமணியன் புகாரின் அடிப்படையில் காளிதாஸ் மீது ஆயுதங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். காளிதாஸ் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, சமூகத்தில் தன்னைப் பற்றி பொதுமக்களுக்கு பயம் வரவேண்டும் என்ற நோக்கில் அண்ணா நகரைச் சேர்ந்த விஜயசங்கர் (22) என்ற வாலிபர் அரிவாளுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இவர் மீது எஸ்.ஐ., சிவராஜா வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். இவர் ஆயுதம் வைத்து மிரட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோல அரிவாளுடன் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த சஞ்சய் (27) என்பவர் மீதும், நாட்டு வெடிகுண்டு ஒன்றை கையில் பிடித்து சுவரில் வீசுவது போன்று இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டுள்ள ஒரு நபர் மீதும் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவோ அல்லது சாதி மற்றும் மத ரீதியான மோதலைத் தூண்டுவது போல, ஆயுதங்களுடன் படங்கள் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.