இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் முதல்தரக் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 92-வது சீசன் இந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி முதன்முதலாகச் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடப்பாண்டில் நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக இடதுகை பேட்டர் ரிங்கு சிங் விளையாடி வருகிறார். பீகார் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 112 ரன்கள் குவித்த அவர், அதனைத் தொடர்ந்து கோவா அணிக்கு எதிரான போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் விளாசி அசத்தினார்.
பிசிசிஐ மீது ரசிகர்கள் விமர்சனம்:
ரிங்கு சிங் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் போதிலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாதது பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துச் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள், "கடைசியாக அவர் விளையாடிய ஆறு ரஞ்சி போட்டிகளில், இரண்டு அரைசதங்கள் மற்றும் நான்கு சதங்களை விளாசியுள்ளார். முதன்மை கிரிக்கெட்டில் சராசரியாக 60 ரன்களுக்கு மேல் வைத்திருப்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல; அது அவரது அசாத்திய திறமை" என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும், அணித் தேர்வில் அரசியலைத் தவிர்த்துவிட்டுத் திறமைக்கு முன்னுரிமை கொடுத்து ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

