தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அரசியலில் களம் இறங்குவது தொடர்பாகத் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகச் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கி முதல்வர் விஜயை ஆட்சியில் அமரச் செய்ததைப் போல, பல நடிகர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் இறுதியில் தனுஷை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகி சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர் தனுஷ், அரசியல் பயணம் குறித்து முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரசியலுக்கு வந்தால் முதல்வர் விஜயையும், திமுகவையும் ஒருசேர எதிர்க்க வேண்டிவரும் என்பதால், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க.வின் ஆதரவைப் பெறத் தனுஷ் விரும்புவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் தனுஷை, பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் மற்றும் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ராம் மாதவ் தரப்பினர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது தனுஷிடம் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் ஆகியோரது செல்வாக்கு தனித்துவமானது. அரசியலில் ரஜினி தவறவிட்ட இடத்தை தற்போது விஜய் பிடித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் விஜயை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை.
ரஜினி ஆதரவு இல்லாமல் தமிழக அரசியல் களத்தில் நீங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாது. எனவே, ரஜினியின் ஆதரவைப் பெற முயற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

