தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா முத்துக்கிருஷ்ணபேரி இந்து உயர்நிலைப் பள்ளியில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விதைப்பந்துகளைச் செய்து குவித்தனர். "பூமி பந்து காய்ச்சல் தீர விதைப்பந்து மாத்திரைகளே சிறந்தது" என்பதை இப்பள்ளி மாணவர்கள் தங்களது செயலால் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

அரை நாளில் 43,000 விதைப்பந்துகளைத் தயாரித்த மாணவ-மாணவியர், அந்த விதைப்பந்துகளைக் கொண்டே பள்ளியின் பெயரைப் பிரம்மாண்டமாக எழுதி வடிவமைத்தனர். "கொஞ்சம் மாணவர்கள், நிறைய உழைப்பு" என்ற அடிப்படையில் முத்துக்கிருஷ்ணபேரி இந்து பள்ளி விதைப்பந்து தயாரிப்பில் தனித்துவத்துடன் விளங்கியது.

இவிதைப்பந்து திருவிழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் பீட்டர் சாம் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுரேஷ் பிரபாகர் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக மற்றும் கேரள ஹரி பிரியாணி ஹோட்டல்களின் அதிபர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன் கலந்துகொண்டு பள்ளிக் குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

விதைப்பந்து பிரச்சாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்து வரும் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் இத்தாடைகளின் தயாரிப்பைச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். மேலும், எட்டாம் வகுப்பு பயிலும் பெபின் அபிஷேக் மற்றும் சந்துரு ஆகிய மாணவர்கள் தங்களது பசுமை நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோலிக்காய் அளவிலும், பனம் பழ அளவிலும் வித்தியாசமான விதைப்பந்துகளை அனைவரும் ஜாலியாகத் தயாரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ரத்ததான கழக மணியன் மற்றும் அம்பை காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தேன்மொழி, செல்வி, அன்னாள், விஜி, ஞானசுந்தரி, சிவ சங்கரி, அருள் நிர்மலா, செசிலியா, ரெஜினா, சிப்ரியா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் மிகச் சிறப்பாகக் கவனித்தனர்.