ஏரல் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் பொதுமக்களால் தாக்கப்பட்ட ரவுடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெண்கள் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல், சேர்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் தனுஷ்கோடி. இவர் அடிக்கடி மதுபோதையில் அக்கம் பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 23-ம் தேதி போதையில் தெருவில் உள்ளவர்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தனுஷ்கோடி மீட்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தனுஷ்கோடியின் மனைவி பிரம்மசக்தி அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலையப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி, சாமதுரை, அஜித், நடுவன், சக்தி மற்றும் இசக்கியம்மாள், பெரிய பிராட்டி, சுந்தரி, மாரியம்மாள், சின்னத்துரை ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த தனுஷ்கோடி ஏற்கனவே காவல் நிலையக் குற்றப் பதிவேட்டில் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.