இந்தியாவில் அண்மைக்காலமாக நடைபெற்ற போராட்டங்களின் போது போராட்டக்காரர்களுக்கு எதிராக அதிகப்படியான அடக்குமுறை கையாளப்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் சபையால் நியமிக்கப்பட்ட சுதந்திர நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இத்தகைய குற்றச்சாட்டுகளை இந்தியா உடனடியாக மறுத்துள்ளது.

20-க்கும் மேற்பட்ட ஐ.நா. நிபுணர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சமீபத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்களின் போது, ஆயுதமற்ற மாணவர்கள் மீது தடியடி நடத்துவது போன்ற பலப்பிரயோகங்களைச் சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

போராட்டக்காரர்கள் மீது அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும். பயோமெட்ரிக் உள்ளிட்ட டிஜிட்டல் கண்காணிப்பு முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும், இணையச் சேவைகளை முடக்குவதையும் தவிர்க்க வேண்டும்.

ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை நீக்கியது மற்றும் அனுமதி மறுத்த சம்பவங்கள் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு முறைகேடு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரங்கள் தொடர்பாக டெல்லி உள்ளிட்ட இடங்களில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்களை மையப்படுத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா. நிபுணர்களின் இந்த அறிக்கையை இந்தியா முழுமையாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. அவையில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி பர்கா தம்ராகர் தெரிவித்ததாவது: சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள், முழுமையற்ற புள்ளிவிவரங்கள் மற்றும் இந்தியா குறித்த போதிய புரிதலற்ற தன்மையின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவைப் பற்றி எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்த முயல்வதை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது. மனித உரிமைகளை அரசியல் அழுத்தத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளை மட்டும் குறிவைப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது; ஆதாரங்களின் அடிப்படையில் பாரபட்சமற்ற அணுகுமுறையே தேவை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.