சிறுமியரைப் பாலியல் வன்முறை செய்த வழக்குத் தொடர்பாகப் 'போக்சோ' சட்டத்தின் கீழ் 'கிரானைட்' வீரமணி (85) மற்றும் அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சாந்தி (61) உள்பட 8 பேரைச் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கப் போலீஸ் அதிகாரிகளுக்குப் பல கோடி ரூபாய் ரொக்கமும், 23 கிலோ தங்கக் கட்டிகளையும் வீரமணி வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகன் பிரகாஷ் கண்ணையா பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பிரகாஷின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த வீரமணியின் மகள் அர்ச்சனா, அவருடன் சேர்ந்து தந்தை மீதான குற்றத்தை மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற அர்ச்சனாவைச் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் விமான நிலையத்தில் நேற்று தடுத்து நிறுத்தினர்; இதனால் அவரது வெளிநாட்டுப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, கிரானைட் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோரை 3 நாள் காவலில் விசாரிக்கக் கோரி சிறப்பு புலனாய்வுப் பிரிவு சார்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, கணேசனை மட்டும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று உத்தரவிட்டார்.