மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் தவெக நிா்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகை அருகே மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் தவெக நிா்வாகி உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். 4 பேரையும் நாகப்பட்டினம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து அங்கு விடிய விடிய தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: “TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party... மத்திய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை 'ஒழிப்பு' பற்றி முதல்வர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?

ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த நெட்வொர்க்கையும் சுற்றி வளைக்க வேண்டும்.

தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.

ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் மோசமான கட்சி என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக பதவி உயர்வு பெற்றுள்ளது.

"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதல்வர் இதற்கும் அதிரடி வசனம் அடிக்காமல் இருக்க வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.