தூத்துக்குடி போல்டன்புரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கதிரவன் (44). இவருடைய மனைவி கவிதா (38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கதிரவன் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தனது தொழில் தேவைகளுக்காகக் கதிரவன் கடந்த 29.11.2024 அன்று தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.7,50,000 கடன் பெற்று கார் வாங்கியுள்ளார்.

அதற்கான மாதத் தவணையை அவர் முறையாகச் செலுத்தி வந்த நிலையில், சமீபத்தில் தொழில் சரிவர நடக்காத காரணத்தால் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத் தவணைகளைச் செலுத்த இயலவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கதிரவனின் வீட்டிற்கு வந்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 5 நபர்கள் கதிரவனின் வீட்டிற்கு நேரில் வந்து, அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதுடன் காரை பறிமுதல் செய்து தூக்கிச் செல்ல முயன்றுள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த அவமானத்தாலும் கடுமையான மனஉளைச்சலாலும் மனமுடைந்த கதிரவன், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி காலை 04.30 மணியளவில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி காலை 10.15 மணியளவில் கதிரவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த கதிரவனின் மனைவி கவிதா அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.