தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் மேலரத வீதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மனைவி ராசாத்தி (58). இவர் முத்தாரம்மன் கோவில் பகுதியில் பனங்கிழங்கு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் ராசாத்தி பனங்கிழங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

வியாபாரம் முடிந்த நிலையில் அவரை மகன் முத்துராஜ் (26) மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அண்ணாசிலை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து ராசாத்தி தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் துணையுடன் மகன் மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் குலசேகரன்பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது