தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பந்தய வேகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 20-ஆம் தேதியன்று, சாத்தான்குளம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள காமராஜர் சிலை பகுதியில், சில நபர்கள் அதிவேகமாகவும் அதிக சத்தத்தை எழுப்பியும் இருசக்கர வாகனங்களை இயக்கியுள்ளனர். இதுகுறித்துத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில், சாத்தான்குளம் ஞானியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களான செல்வராஜ் மகன் தமிழரசன் (22), மோகன் மகன் முத்து (19), நடராஜன் மகன் கோகுலகண்ணன் (21) மற்றும் பட்டுராஜ் மகன் தனுஷ் சூர்யா (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

காவல்துறையின் எச்சரிக்கை:

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், பைக் ரேஸ், பைக் வீலிங் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.