பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில், அடர்த்தியான குடியிருப்புப் பகுதியான திர் காலனி அமைந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்து கொடூர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 33 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் என மொத்தம் 34 பேர் இடிபாடுகளில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நிலைமையை அறியப் பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் குவிந்தனர். இன்னும் பல குழந்தைகள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அவசர உதவிப் பிரிவு செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி தெரிவித்தார்.

பள்ளி கட்டிடம் மிகவும் பலவீனமாக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளியின் உரிமையாளரைக் காவல்துறை கைது செய்துள்ளதுடன், விபத்துக்கான காரணி குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது