தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் கடுமையான நெருக்கடியால் கார் டிரைவர் கதிரவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்துத் தமிழக அரசும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கட்சியின் தூத்துக்குடி மாநகரக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் : வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தத் தவறும்போது, அவர்களை மிரட்டுவது, அவமதிப்பது மற்றும் சட்டவிரோதமான முறையில் நெருக்கடி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். கடன் வசூல் நடவடிக்கைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெற வேண்டும்.

கதிரவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்துக் காவல்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும். கடன் வசூலின்போது மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த கதிரவனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கடன் வசூல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து, இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.