தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மந்திரிதோப்பு சாலைப் பகுதியில் 'ஆயுஷ்' என்ற பெயரில் நாட்டு மருந்து கடை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நாட்டு மருந்து கடையை அடைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவில் இக்கடையின் உள்ளிருந்து திடீரெனப் புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.
இருப்பினும், தீ விபத்து காரணமாகக் கடையில் இருந்த நாட்டு மருந்துகள் மற்றும் பூஜை பொருட்கள் முழுவதிலும் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மின் கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

