முன்னணி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

முந்தைய பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாராவைக் கதாநாயகியாகக் கொண்டு, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, சினேகா, யோகி பாபு, அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அவினி சினிமேக்ஸ், நயன்தாரா மற்றும் ஐவி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது.

இதனிடையே, இப்படத்தின் டிரெய்லர் 'World of Mahasakthi' என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் நயன்தாரா பயந்த சுபாவம் கொண்ட பெண் காவல் அதிகாரியாகவும், மற்றொரு புறம் பவர்ஃபுல்லான அம்மனாகவும் இருவேறு பரிணாமங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். மேலும் ரெஜினா மற்றும் துனியா விஜய் ஆகியோர் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் மிரட்டியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ அடுத்த மாதம் (நவம்பர்) 6-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.