பாளையங்கோட்டையில் கடந்த ஆண்டு மென்பொறியாளர் கவின் கொல்லப்பட்ட வழக்கில், பெண்ணின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்ததை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பாளையங்கோட்டை கேடிசி நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாகப் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் அஜித், அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சரவணனும், கிருஷ்ணகுமாரியும் காவல் துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வருவதால், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் செயலால் இருவரும் பணியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, திருநெல்வேலியில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, வழக்கில் புலனாய்வாளர்கள் கண்டறிந்த பல வேறு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளாமல் சாட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

