ஈக்வடார் நாட்டில் நேரலைத் திருப்பலியின் போது, மரணம் குறித்துப் பிரசங்கித்த பாதிரியாரின் தலையில் பிரம்மாண்டமான மரச் சிலுவை சரிந்து விழுந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்வடார் நாட்டின் குவாயாகுவில் நகரில் உள்ள பெர்பெச்சுவோ சொகொரோ தேவாலயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குத் திருப்பலி நிகழ்வு சமூக வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது பாதிரியார் பட்ரிசியோ அல்ப்ரெடோ சான்செஸ் மொலினாரி என்பவர், வாழ்க்கை மற்றும் மரணத்தின் தற்காலிகத்தன்மை குறித்து மிகவும் உணர்ச்சிகரமாகப் பிரசங்கம் செய்தார்.
"நம்மில் அனைவரும் ஒருநாள் இறப்போம்" என்று அவர் பேசி முடித்த சில நொடிகளில், அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய மரத்தாலான இயேசு நாதரின் சிலுவை எதிர்பாராதவிதமாக திடீரெனக் கழன்று அவரது தலையின் பின்புறத்தில் பலமாகச் சரிந்து விழுந்தது.
இந்த எதிர்பாராத விபத்தில் பலிபீடத்திலேயே அவர் நிலைதடுமாறிச் சுருண்டு விழுந்தார். உடனே அதிர்ச்சியடைந்த தேவாலயப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாதிபரியாரின் அகால மரணம் குறித்து குவாயாகுவில் பேராயர் தேவாலயம் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. நேரலையின்போது நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் உலகளவில் கத்தோலிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

