நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவிப் பகுதியில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே புகழ்பெற்ற மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இங்குக் தினமும் உள்ளூர் மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளனர்.
இருப்பினும், தூரத்திலிருந்தபடி அருவியின் அழகையும் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் பார்த்து ரசிப்பதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

