மனதின் குரல் பயணம் ஒரு புனித யாத்திரைக்கு இணையானது என்றும், இதன் மூலம் நாட்டின் சாமானிய மக்களின் அசாதாரண உழைப்பையும் மக்கள் சக்தியையும் தான் வழிபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 139-வது 'மனதின் குரல்' (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: "12 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், மங்களகரமான விஜயதசமி திருநாளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியைத் தொடங்கினோம். அப்போதிருந்து நமது இந்தப் பயணம் எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து வருகிறது. இந்த நீண்ட பயணத்தில் நாட்டின் மக்களாகிய நீங்கள் எனது சக பயணிகளாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வருகிறீர்கள்.

சாமானிய மக்களின் கடின உழைப்பு, வீரம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வு ஆகியவற்றைப் பாராட்டுவதற்கு எனக்குக் கிடைத்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாகவே இதை நான் கருதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் இந்த 12 ஆண்டு கால பயணம் என்பது ஒரு புனித யாத்திரைக்குச் சற்றும் குறைந்தது அல்ல. கடந்த 12 ஆண்டுகளில், சமூகத்தால் கவனிக்கப்படாமல் இருந்த பல சாமானிய மனிதர்கள் தங்களது அசாதாரணமான சமூகப் பணிகளுக்காக இத்தளத்தின் மூலம் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, நாட்டின் மகத்தான மக்கள் சக்தியை நான் வழிபடுகிறேன். பாரதத்தின் ஒவ்வொரு குடும்பத்துடனும் நேரடியாக இணைய இது எனக்குப் பெரும் வாய்ப்பை அளிக்கிறது.

'மனதின் குரல்' நிகழ்ச்சியைக் கேட்கும்போது, நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எங்களுடன் அமர்ந்து உரையாடுவது போல் உணர்கிறோம் எனப் பொதுமக்கள் எனக்குப் பல கடிதங்களை எழுதியுள்ளனர். மக்களிடம் இருந்து கிடைக்கும் இந்த நெருக்கமும், பாசமும்தான் எனது விலைமதிப்பற்ற சொத்துகள் ஆகும்" எனப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.