தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவது மக்களுக்குப் பயனளிக்காது என எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது "மழைக்காலத்தில் மழைநீர் விரைவாகக் கடலுக்குச் செல்வதற்குத் தேவையான பணிகள் மற்றும் தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் அடைப்புகள் உள்ளதா என்பது குறித்து மேயர் ஆய்வு செய்து வருகிறார். தூத்துக்குடியிலிருந்து மழைநீர் கடலுக்குச் செல்வதற்கு முன்பு மூன்று வழித்தடங்கள் மட்டுமே இருந்தன.

ஆனால், திமுக ஆட்சியில் இந்த வழித்தடங்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்த்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. எனவே, எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் விரைவாக வெளியேறத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கிட்டத்தட்ட ஏழு குளங்கள் தூர்வாரப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளன. கடல்நீர் ஊடுருவலைத் தடுப்பதுடன், மழைநீர் வடிகால்களாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இவை உதவும். பக்கிள் ஓடையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதுடன், FCI கிடங்கு முன்பகுதியிலும் தண்ணீர் தேங்காதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைக்காமல் அதிகாரிகள் தனித்துச் செயல்படுவது குறித்துக் கண்டனம் தெரிவித்த கனிமொழி, "அதிகாரிகள் இடமாறுதலில் வருவார்கள், போவார்கள்; அவர்களுக்குத் தூத்துக்குடியைப் பற்றிய முழுமையான புரிதல் இருக்காது. ஆனால், மேயருக்கும், மாவட்டக் கழகச் செயலாளர் கீதா ஜீவன் அவர்களுக்கும் இப்பகுதி குறித்த சரியான புரிதல் உண்டு.

மக்கள் பிரதிநிதிகளைத் தவிர்த்துவிட்டு அதிகாரிகள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது மக்களுக்குப் பயனளிக்காது. ஆட்சி மாறிவிட்டது என்ற அச்சத்தில் சில அதிகாரிகள் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுவிடக் கூடாது" என்றார்.