தூத்துக்குடி மாவட்டம், புறையூர் தெற்குத் தெருவைத் தொடர்ந்து அமைந்துள்ள கச்சனாவிளை கிராமத்தில், பனந்தோப்பில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மகான் செய்யது அகமது துல்கபீர் ரிபாயி அவர்களின் 310-வது நினைவு தின கந்தூரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் புறையூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கடந்த அக்டோபர் 21-ந்தேதி புதன்கிழமை காலை 9 மணியளவில் மவ்லூது ஓதி, துவா பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் எனச் சுமார் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று இரவு 9 மணியளவில் இறைநேசர் மகான் சேகு சிந்தா அவர்களின் கந்தூரி விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியுடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொடி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது பனந்தோப்பில் அமைந்துள்ள மகான்களின் நினைவிடத்தைச் சென்றடைந்ததும் சிறப்புத் துவா பிரார்த்தனை நடத்தப்பட்டது. பின்னர், புறையூர் கிராமத்தின் அனைத்துத் தெருக்கள் வழியாகவும் ஊர்வலம் வலம் வந்தது.
தொடர்ந்து, அதிகாலை 3 மணியளவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

