ஆத்தூரில் மாணவரின் கையில் கட்டப்பட்டிருந்த தசரா காப்புக்கயிறை அறுத்து எறிந்த தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீது காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பெத்தநாச்சியம்மன் நகரைச் சேர்ந்த 15 வயது மாணவர், ஆத்தூரிலுள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் சில தினங்களுக்கு முன்னர் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்து தன் கையில் காப்புக்கயிறு கட்டியிருந்தார்.

இந்நிலையில் பள்ளியில் மாணவரின் கையில் காப்புக்கயிறைக் கண்ட தலைமையாசிரியர் பிலிப்எமர்சன் ரஞ்சித்சிங், அவரது கையில் கட்டியிருந்த காப்புக்கயிறை அறுத்து எறிந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து கடந்த 13-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவ-மாணவியரின் பெற்றோர் மற்றும் இந்து அமைப்பினர் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் மாணவனின் தாயார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், மாணவனை அசிங்கமாகத் திட்டியது, தாக்கியது மற்றும் அவரது மத நம்பிக்கையை அவமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

இதன் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் பிலிப் எமர்சன் ரஞ்சித்சிங் மீது ஆத்தூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் பொன்முனியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.