பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தைக் குறிப்பிட்டு லாட்டரியில் ரூ.1.25 கோடி பரிசு விழுந்துள்ளதாகக் கூறி இளம்பெண்ணிடம், ரூ.3¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருங்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பேஸ்புக்கில் கேரள லாட்டரி விளம்பரம் வந்துள்ளது. அதனைப் பார்த்த அந்தப் பெண், ஜிபே மூலம் ரூ.50 செலுத்தி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அடுத்த 2 நாட்களில் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை 2 மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அவர்கள் லாட்டரி சீட்டில் ரூ.1.25 கோடி பரிசு விழுந்து இருப்பதாகவும், அதனைப் பெற ஜி.எஸ்.டி., டி.டி.எஸ்., என்.ஓ.சி. ஆகிய செலவுகளுக்கு ரூ.3½ லட்சம் அனுப்புமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண், ஜிபே மற்றும் போன்பே மூலம் செல்போனில் பேசிய மர்ம நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

அதன்பிறகும் மர்ம நபர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு வரிகளுக்காகக் கூடுதல் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண், ஆன்லைன் லாட்டரி விளம்பரம் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, அந்த விளம்பரம் பணம் மோசடிக்காக அனுப்பியிருப்பது தெரியவந்தது. தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த அந்தப் பெண் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.