வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால், குளங்களில் இருந்து விவசாயப் பணிகளுக்காக மண் எடுக்கும் பணி தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தில் உள்ள குளத்தில், நேற்று சிலர் அனுமதியின்றி 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரம்பை மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த திருச்செந்தூர் சப்-கலெக்டர் கவுதம் மற்றும் ஏரல் தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்த 3 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ஒரு டிராக்டரைப் பறிமுதல் செய்தனர்.

வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து அதிகாரிகளுக்கும் மண் அள்ளியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சப்-கலெக்டர் கவுதம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எம்.எல்.ஏ. சரவணன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புகையில், "நான் மக்களுக்காகப் பணியாற்ற வந்துள்ளேன். இதுவரை குளத்தைத் தூர்வார எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை? விவசாயிகள் தங்களது தேவைக்காக மண் எடுப்பதை ஏன் தடை செய்கிறீர்கள்?" என்றார்.

அதற்குப் பதிலளித்த சப்-கலெக்டர், பருவமழை தொடங்கியுள்ளதால் குளத்திற்கும் அதன் கரைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலேயே நீர்வளத்துறை மண் அள்ளத் தடை விதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

விவாதத்தைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சப்-கலெக்டர் மற்றும் தாசில்தார் வாகனங்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். உடனே பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி அதிகாரிகளின் வாகனங்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.