தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இத்திருவிழா, நடப்பாண்டில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் நாள்தோறும் அம்மன் மற்றும் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றன. மேலும், கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் சமய சொற்பொழிவுகளும் நாள்தோறும் நடைபெற்றன.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்புக் கட்டிய லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, பல்வேறு தெய்வங்கள், விலங்குகள், குறவன்-குறத்தி, ராஜாக்கள், மூவேந்தர்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மனுக்குக் காணிக்கை வசூலித்தனர். ஆயிரக்கணக்கான தசரா குழுவினர் வீதிதோறும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததால் உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.
திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 11 மணிக்குச் சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருளிய அம்மன், அங்குத் திரண்டிருந்த பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நள்ளிரவில் மகிஷாசுரனைச் சம்ஹாரம் செய்தார்.
அதன் பின்னர், கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில் முன்புள்ள அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கம் ஆகிய இடங்களில் எழுந்தருளிய அம்மனுக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காகத் திங்கள்கிழமை பகலில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் நோக்கி வரத் தொடங்கினர். வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டுக் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்துச் சீராகப் பராமரிக்கப்பட்டது.
புதன்கிழமையான இன்று (அக்டோபர் 21) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அம்மன் திருக்கோயிலைச் சென்றடைந்ததும் கொடியிறக்கப்பட்டு, காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இன்று இரவு 12 மணிக்குச் சேர்க்கை அபிஷேகம் நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

