சாத்தான்குளம் அருகே சாஸ்தா கோயிலில் மர்ம நபர்கள் 5 கதவுகள் மற்றும் 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும், சிசிடிவி கேமரா டிவிஆர் இயந்திரத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் ஸ்ரீநெட்டுவான் கோட்டை ஹரிஹர சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம். வழக்கமான பூசாரி முத்துப்பாண்டி குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்குச் சென்றிருந்ததால், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ராஜா என்பவர் தற்காலிகமாகப் பூஜை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பூஜை நடத்துவதற்காக ராஜா கோயிலுக்குச் சென்றபோது, அங்குள்ள 5 கோயில்கதவுகளும் உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த 3 உண்டியல்களும் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. இதுகுறித்து அவர் கோயில் தர்மகர்த்தா ஆலங்கிணறு துரைராஜிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த தர்மகர்த்தா துரைராஜ் விரைந்து வந்து கோயிலைப் பார்வையிட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன் பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் மருதுபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து கதவுகளை உடைத்தபோதிலும், அங்கிருந்த விலைமதிப்பபான வேறு பொருட்கள் எதையும் திருடவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், உண்டியலில் இருந்த சுமார் ரூ. 2,000 ரொக்கப்பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். மேலும், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை மறைக்கும் நோக்கில், அதன் டிவிஆர் (DVR) இயந்திரத்தையும் சேர்த்து மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். கோயிலில் தங்க, வெள்ளி நகைகள் இல்லாததால் அவை தப்பியுள்ளன.

தூத்துக்குடியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கோயிலில் திருடர்களின் கைரேகைப் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. கோயில் தர்மகர்த்தா துரைராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.