ஆரோக்கியமான குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், போலியோ பரவலைத் தடுக்கவும், போலியோ இல்லா உலகத்தை உருவாக்கவும் ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் தேதி சர்வதேச போலியோ விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய வயதில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதன் அவசியம் குறித்தும், எந்தக் குழந்தையும் விடுபடாத வகையில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போலியோ ஒழிப்பு முகாம்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவும் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகள் போலியோ விழிப்புணர்வு குறித்த ரங்கோலி கோலங்களை வரைந்தனர். மேலும் போலியோ தொடர்பான கேள்வி-பதில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும், விழிப்புணர்வு வால் போஸ்டர்களும் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன், எம்.எஸ்.எஸ்.வி. பாபு, ஜெயபிரகாஷ் நாராயண சாமி, முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா அனைவரையும் வரவேற்றார். பரமக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் ஜெபின் ஜோஸ் உலக போலியோ விழிப்புணர்வு தின நோக்க உரையாற்றினார்.
ஸ்ரீராம் நகர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் உமாதேவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வால் போஸ்டர்கள் மற்றும் பரிசுகளை மாணவிகளுக்கு வழங்கி உரையாற்றினார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கண்ணன், நடராஜன் உட்படக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். நிறைவாகக் கோவில்பட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

