கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை' முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ நூலகம், 350 பேர் அமரக்கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோவையில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள ரூ.408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார். மேலும், ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளிடம் அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கே நேரில் சென்று நவீனச் செயற்கைக்கால்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம், பீளமேடு, ரெட்பீல்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடாக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 3,500 காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.