வரவிருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டுச் சென்னை - நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் காத்திருப்போர் பட்டியல் 803 ஆக உயர்ந்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் வரை பயணிக்கும் 20635 அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், தென் மாவட்ட மக்களின் முதன்மைத் தேர்வாக விளங்கி வருகிறது.

குறிப்பாகக் குமரி மாவட்டத்தின் கல்குளம், திருவட்டார், விளவங்கோடு தாலுகாக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதுவே ஒரே நேரடி சென்னை இரவு நேரச் சேவையாகும்.

இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி பயணத்திற்கான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் வகுப்பின் காத்திருப்போர் பட்டியல் (Waiting List) 803-ஐக் கடந்துள்ளது. பிற ரயில்களிலும் இடங்கள் முழுமையடைந்து 'ரிக்ரெட்' (Regret) நிலையை எட்டியுள்ளதால், பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை அதிக கட்டணம் செலுத்திப் பயணிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நாகர்கோவில் டவுன் – இரணியல் இடையிலான இருவழிப் பாதை பணிகள் நிறைவடைந்து வெற்றிகரமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரயில்கள் நிலையங்களில் காத்திருக்கும் நேரம் (Crossings) கணிசமாகக் குறைந்துள்ளது.

மேலும், தெற்கு ரயில்வே மண்டலத்திற்குப் புதிய ‘அமிர்த் பாரத்’ (Amrit Bharat) ரயில் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதிக வருவாய் ஈட்டித் தரும் இத்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்குவது ரயில்வே துறைக்கும் நல்ல லாபத்தைத் தரும் எனக் சுட்டிக்காட்டப்படுகிறது.

பொதுமக்களின் முதன்மையான 6 கோரிக்கைகள்:

தாம்பரம் – திருவனந்தபுரம் அமிர்த் பாரத் ரயில்: வாராந்திரச் சேவையாக இயங்கும் 16121/16122 தாம்பரம் – திருவனந்தபுரம் (நாகர்கோவில் வழியாக) அமிர்த் பாரத் ரயிலை உடனடியாகத் தினசரி சேவையாக உயர்த்த வேண்டும்.

தாம்பரம் – நாகர்கோவில் / கன்னியாகுமரி ரயில்கள்: வாரத்திற்கு 3 நாட்கள் இயங்கும் தாம்பரம் – கன்னியாகுமரி ரயிலைத் தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.

சென்ட்ரல் – கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்: சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் 12689/12690 வாராந்திர ரயிலைத் தினசரி சேவையாக்க வேண்டும்.

வந்தே பாரத் நீட்டிப்பு: திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (20665/20666) வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும்.

ஸ்லீப்பர் வந்தே பாரத் அறிமுகம்: சென்னை – கன்னியாகுமரி இடையே புதிய ‘ஸ்லீப்பர் வந்தே பாரத்’ ரயிலை முதற்கட்டமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள்: விடுமுறை நெரிசலைச் சமாளிக்க உடனடியாகச் சென்னை – நாகர்கோவில் இடையே கூடுதல் தாற்காலிகச் சிறப்பு ரயில்களை (Special Trains) இயக்க வேண்டும்.

தெற்கு ரயில்வே நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாகத் தலையிட்டு இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கமும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.