நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக இளைஞர் அணி நிர்வாகியான தனது தோழியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அந்த வழியாகக் காரில் வந்த மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபரின் காரில் இருவரும் ஏறியுள்ளனர்.

வழியில் தவெக பெண் நிர்வாகி இறங்கிக் கொண்ட நிலையில், கல்லூரி மாணவியை அவரது ஊரில் கொண்டு விடுவதாகக் கூறி கிறிஸ்டோபர் தனியாகஅழைத்துச் சென்றுள்ளார். பாதி வழியில் காரை நிறுத்திய கிறிஸ்டோபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவரை கடுமையாகத் திட்டிவிட்டு காரிலிருந்து இறங்கிச் சென்றுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தவெக நிர்வாகியான தனது தோழியிடம் கூறி மாணவி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது தோழி மாணவியைக் கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை அலைக்கழித்துள்ளனர்.

மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயரம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைக் கவனித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் உத்தரவின் பேரில், தக்கலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.