முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 8 மாணவர்கள் நேற்று முன்தினம் காரில் கேரளம் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில், இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் 8 மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த 8 மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர, அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் விரைவுபடுத்தத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இப்பணிகளை ஒருங்கிணைக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் உடனடியாக திருச்சூருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின்னர் திருச்சூர் மாவட்ட கலெக்டரால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இச்சம்பவத்தால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செயல்முறையை விரைவுபடுத்தி தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை தமிழ்நாட்டிலுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிய கேரளம் மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் நேற்று, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் மாடசாமி (வயது 33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.