சென்னை காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை அவர் வழங்கினார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: 1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும் சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!
இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும் விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.

கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல் அயராது உழைத்து நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

