தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கசவன்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (63). இவரது மனைவி சண்முகலட்சுமி (59). இவர்கள் இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்களது மகன் சித்துராஜுடன் (27) சங்கரன்கோவில் அருகே உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்குக் காரில் சென்றுள்ளனர்.
விழா முடிந்து மதியம் மீண்டும் காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரைச் சித்துராஜ் ஓட்டிவந்துள்ளார். கழுகுமலை அருகே கல்லூரணி கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஜீவானந்தம் மற்றும் சண்முகலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டிவந்த சித்துராஜ் மற்றும் எதிரே வந்த காரை ஓட்டிவந்த நாலாட்டின்புதூர் வி.பி.சித்தன் நகரைச் சேர்ந்த வைரவன் மகன் கரண் (27) ஆகிய இருவருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாலாட்டின்புதூர் காவல் நிலையப் போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

