நாகர்கோவில் அருகே உள்ள தம்புக்கோணம் அனந்த நாடார்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை போன வழக்கில், காண்ட்ராக்டர் பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்புக்கோணம் அனந்த நாடார்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 98 பவுன் நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மதுமிதா மீது நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த பேச்சிமுத்து (35) என்ற காண்ட்ராக்டர் ராஜக்கமங்கலம் போலீஸில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு புகார் அளித்திருந்தார்.

அதில், மதுமிதா தன்னிடமிருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுமிதா நகை பறித்ததாகக் கூறப்பட்ட இடமான உத்தம் பாண்டியங்குளம், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் ராஜக்கமங்கலம் போலீசார் இந்த வழக்கைப் பாளை தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

இதன் அடிப்படையில் பாளையங்கோட்டை தாலுகா காவல் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் நடத்திய விசாரணையில், காண்ட்ராக்டர் பேச்சிமுத்து முதுகுவலி பிரச்சனைக்காகப் பிசியோதெரபிக்குச் சென்றபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நெல்லை வந்த அவர், உத்தம் பாண்டியங்குளம் விலக்கு பகுதியில் காரில் இருந்தபடியே பேச்சிமுத்துவுக்கு மசாஜ் செய்து நகையைத் திருடிச் சென்றதாகவும் பேச்சிமுத்து தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து, முதாவதாகப் பேச்சிமுத்திடம் விசாரணை நடத்துவதற்காக அவரை நேரில் வந்து ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் சம்மன் அனுப்பியிருந்தார். ஆனால் பேச்சிமுத்து போலீஸில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் யூடியூபர் மதுமிதாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் பாளை தாலுகா காவல் நிலையத்திலிருந்து யூடியூபர் மதுமிதாவுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. அதனை அவரது கணவர் பெற்றுக்கொண்டார். அதில் வருகிற 19-ந்தேதி மதுமிதா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.