தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (43). இவரது 15 வயது மகளுக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவருக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஞானபிரகாஷ் அடிக்கடி முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (அப்.22) இரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த அரிவாளால் முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (39) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அங்கிருந்த முத்துக்கிருஷ்ணனின் இரண்டு மகள்களையும் ஞானபிரகாஷ் வலுக்கட்டாயமாகத் தன்னுடன் அழைத்துச் சென்று தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மேரி விஜிலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஞானபிரகாஷின் வீட்டிலிருந்த இரண்டு சிறுமிகளையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய ஞானபிரகாஷை தனிப்படை போலசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

