தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் எல்.ஆர். நகரைச் சேர்ந்த அடைக்கண் என்பவரது மகன் பழனி (70) என்பவர், கடந்த 15ஆம் தேதி தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ஆறுமுகநேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் எல்.ஆர். நகர் தெருவிற்கு வலது பக்கம் திரும்பியபோது, எதிரே வந்த யமகா எம்.டி. பைக் அவரது வாகனத்தின் மீது மோதியது.
இவ்விபத்தில் பழனிக்கு பலத்த காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டது. உடனடியாக அவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த திருச்செந்தூர் ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுந்தர் (20) என்பவரும், அவருடன் வந்த பாலமுருகன் என்பவரது மகன் கார்த்திக் (20) மற்றும் ராஜ்குமார் என்பவரது மகன் சுரேந்தர் (18) ஆகியோரும் இவிபத்தில் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

