உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவியுடன் ஐவிஎஃப் (IVF) சிகிச்சை பெற்று வரும் பிரிட்டனைச் சேர்ந்த டேவ் ஃப்ளூ என்பவர், இந்தியாவின் மருத்துவச் சேவைகள் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த டேவ் ஃப்ளூ என்பவர் தனது மனைவிக்குச் செயற்கைக் கருத்தரித்தல் (IVF) சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். அவர் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள 'மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் தனது மனைவியுடன் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்தை விட இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை மிக விரைவாகவும் குறைந்த செலவிலும் கிடைப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேவ் ஃப்ளூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: "இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு இங்கிலாந்தை விடச் மிகச் சிறப்பாக உள்ளது. நானும் எனது மனைவியும் லக்னோவில் உள்ள மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஐவிஎஃப் சிகிச்சை பெற்று வருகிறோம். இங்கு கிடைத்த அனுபவம் எனக்குப் பல புதிய புரிதல்களை அளித்துள்ளது.

இங்கிலாந்தில் எக்ஸ்-ரே பரிசோதனை அறிக்கையைப் பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும்; ஆனால், இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்குள் அறிக்கை கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகளுக்கான சந்திப்பு கிடைப்பது மட்டுமில்லாமல், ஒரே கட்டடத்தில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்து கொள்ள முடிகிறது. இத்தகைய வசதிகள் கொண்ட மருத்துவமனையில், குறைந்த செலவில் இவ்வளவு விரைவாகச் சிகிச்சை பெற முடிவதை என்னால் இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்தக் காணொலியை 1.68 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு 'லைக்கிக்' செய்து, பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இணையவாசி ஒருவர், "10 நிமிடங்களில் முடிக்கக்கூடிய எக்ஸ்-ரே அறிக்கைக்காக ஒரு மாதம் ஏன் காத்திருக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருவர், "இதைக் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது; இந்தியாவில் வீட்டு வேலை உதவி மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் குறைந்த செலவில் கிடைக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.